NextPrev
Slide 1Slide 1Slide 1
தமிழர் தகவல்
கனடிய தமிழர் சமூகத்தின் தேவை கருதி சேவை நோக்குடன் 1991ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழர் தகவல் சஞ்சிகை வெளியீடு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக, மாதம் தவறாது ஒவ்வொரு ஐந்தாம் திகதியில் அறாத்தொடராக சஞ்சிகை வெளிவருகிறது. எமது தகவல் நெடும்பயணத்தில் இது ஒரு மைல்கல். இந்த சாதனைப் பயணத்தின் பங்காளிகளாக படைப்பாளிகள், வணிகத்துறை நண்பர்கள், தன்னார்வத் தொண்டர்கள் அமைந்துள்ளனர். எந்த அரசாங்கத்திடமிருந்தும் எந்தவொரு நிறுவனத்திடமிருந்தும் நிதியுதவி எதனையும் பெறாது, சமூகத்தின் முழுமையான பங்களிப்புடன் தமிழர் தகவல் வெளிவருவது வரலாற்றுப் பதிவுக்குரியது.
முதன்மை ஆசிரியர்
தமிழர் தகவல் முதன்மை ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி என வெகுஜன தொடர்புச்சாதனத்தின் சகல பரப்பிலும் அறுபது ஆண்டுகளைத் தாண்டியும் தொடர்ச்சியாகப் பணியாற்றிவரும் துறைசார் அனுபவ அதிமூத்த ஊடகவியலாளர். 1989ம் ஆண்டு கனடா வருவதற்கு முன்னர் இலங்கையில் இரண்டு தினசரிகளிலும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆங்கில செய்திப் பிரிவிலும் கடமையாற்றிய பின்னர், இரண்டு தினசரிகளை ஆரம்பித்து அதன் நிறுவக ஆசிரியராகப் பணியாற்றியவர். 1991ம் ஆண்டு தமிழர் தகவல் சஞ்சிகையை ஆரம்பித்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
1998ம் ஆண்டு கனடிய பலவின ஊடக அமைப்பு இவருக்கு ஆளுமை ஊடகவியலாளர் விருது வழங்கி மதிப்பளித்தது. 2001ல் சர்வதேச தன்னார்வத் தொண்டர் ஆண்டு வைபவத்தையொட்டி ரொறன்ரோ நகர முதல்வரினதும் ஒன்ராறியோ அரசாங்கத்தினதும் சிறப்பு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டது. 2007ம் ஆண்டு ஒன்ராறியோ அரசு ‘புதிய குடிவரவாளர் சாம்பியன்’ விருதை அறிமுகம் செய்தபோது அவ்விருதை முதலாண்டிலேயே பெற்றவர்களில் இவரும் ஒருவர். கனடாவின் பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான ஜூன் கால்வூட் ஞாபகார்த்தமாக கனடா பிரஜாவுரிமை அமைச்சு வழங்கிய அதியுயர் சேவை விருது 2012ம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. 2019ல் கனடிய தமிழ் இலக்கிய தோட்டம் இவரது அரைநூற்றாண்டுக்கும் மேலான ஊடகப்பணியை மதித்து சிறப்பு விருது வழங்கி பெருமைப்படுத்தியது.